இந்தியாவில் உள்ள சிறு,குறு நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் பெற்று தரும் வசதியை தொடங்கவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு கடன்களை பெற்று தரும் திட்டத்தினை இந்தியாவில் (India) தான் முதன்முதலில் ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கியுள்ளது. மாநகரங்கள், நகரங்களில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு இந்த கடனுதவி கிடைக்கும்.
இதனை சிறு தொழில் கடன் நிறுவனமான “இண்டிஃபையுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக கூறியுள்ளது. இதன் மூலம் இண்டிஃபை நிறுவனத்தின் கடன் திட்டங்கள் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யப்படும். இதன் மூலம் தொழில் தொடங்க விரும்புபவர்கள் எளிதாக கடன் பெறலாம்.
இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்திய பிரிவு துணைத் தலைவர் அஜீத் மோகன் செய்தியாளர்க்களுக்கு காணொலி மூலமாக அளித்த பேட்டியில், ” ஃபேஸ்புக் மூலம் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் எளிதாக கடன் கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம்.எங்களுடன் இண்டிஃபை நிறுவனமும் இத்திட்டத்தின் வாயிலாக இணைந்துள்ளது.
இதற்கடுத்த கட்டமாக மேலும் சில நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தினை தொடங்குவதன் மூலம் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எந்த ஒரு வருவாயும் கிடைக்கப்போவதில்லை. ஃபேஸ்புக்கினை பயன்படுத்தி கடன் பெறுவதற்கு கட்டணம் ஏதும் நிறுவனம் வசூலிக்காது.
இந்த திட்டம் சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோரையும் , ஃபேஸ்புக் நிறுவனத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக இது இருக்கும்” என்று தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக